கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரிட்டன் துணைத் தூதரகம் இனி அந்தத் தகுதியில் செயல்படாது என இஸ்ரேல் அறிவித்துள்ளது. துணைத் தூதர் உட்பட 20 அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலியக் குடியேற்றங்களுடன் வர்த்தகம் செய்ய பிரிட்டன் கடந்த மாதம் தடை விதித்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. ‘இஸ்ரேலுக்கு எதிரான தூதரக நடவடிக்கைகளை இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்’ என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் கூறினார். ஏழு அதிகாரிகள் கொண்ட குழு மட்டும் குறைந்த அளவிலான பணிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.இதனிடையே, அதே கட்டிடத்தில் ‘ஜெருசலேம் பிரிட்டன் அலுவலகம்’ என்ற பெயரில் பணிகள் தொடரும் என பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் எட் மிலிபாண்ட் தெரிவித்தார். பாலஸ்தீனர்களுடனான உறவைப் பேணுவதும், அப்பகுதிக்கு வரும் பிரிட்டன் குடிமக்களுக்கு உதவுவதும் தொடரும் என்றார்.
இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேலியத் தூதரக அதிகாரிகளை வெளியேற்றப் போவதில்லை என பிரிட்டன் தெரிவித்துள்ளது. தனது அதிகாரிகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிப்பது குறித்து இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
‘சுமார் 200 ஆண்டுகளாகச் செயல்படும் துணைத் தூதரகத்தை மூட இஸ்ரேலுக்குச் சட்ட உரிமை இருப்பதை ஏற்கவில்லை’ என்றும் மிலிபாண்ட் கூறினார். கிழக்கு ஜெருசலேம் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்பதே பிரிட்டனின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்தார். துணைத் தூதரகத்தின் பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளது. எனினும், பாலஸ்தீனர்களுடன் தொடர்ந்து பணியாற்றவும், இஸ்ரேலும் பாலஸ்தீனமும் தனித்தனி நாடுகளாக அமையும் தீர்வுக்கு ஆதரவளிக்கவும் அங்கு தனது இருப்பைத் தொடர்வதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
மேற்குக் கரை, காசா, கிழக்கு ஜெருசலேம் ஆகியவற்றை 1967 போரில் இஸ்ரேல் கைப்பற்றியது. இந்தப் பகுதிகளை எதிர்கால பாலஸ்தீன நாட்டின் பகுதிகளாக பாலஸ்தீனர்கள் கோருகின்றனர். மேற்குக் கரையில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட யூதக் குடியேறிகள் வசிக்கின்றனர். இந்தக் குடியேற்றங்களை ஐக்கிய நாடுகள் சபையும் பெரும்பாலான உலக நாடுகளும் சட்டவிரோதமானவை எனக் கருதுகின்றன.